Tuesday 18 October 2011

கூடங்குளத்தில் அடுத்த மாதம் மின் உற்பத்தியை துவக்க ஏற்பாடு

கூடங்குளத்தில் அடுத்த மாதம் மின் உற்பத்தியை துவக்க ஏற்பாடு: அணுசக்தி கமிஷன் தலைவர்

""கூடங்குளம் அணுமின் நிலையத்தில், அடுத்த மாதம், மின் உற்பத்தியை துவங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அணுமின் நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ள விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடையே பிரசாரத்தை மேற்கொள்வதற்காக, ஒரு நடுநிலையான வல்லுனர் குழு, தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,'' என, அணுசக்தி கமிஷனின் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:கூடங்குளம் அணுமின் நிலையத்தில், கடந்த செப்டம்பரிலேயே மின் உற்பத்தியை துவக்கி இருக்க வேண்டும். ஆனால், அங்கு நடக்கும் போராட்டங்களால், உற்பத்தியை துவக்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.போராட்டக்காரர்களின் கோரிக்கையான, "கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும்' என்பதை, மத்திய அரசால் ஏற்க இயலாது. அணுமின் நிலைய பணிகள் துவக்கப்பட்டுவிட்டதால், அதை நடுவில் கைவிட முடியாது. இதை கைவிட்டால், வேறு சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.எரிபொருள் கம்பிகளை, அணு உலையில் ஏற்றுவதற்கு மத்திய அரசின் அனுமதியை கோரியுள்ளோம்; அனுமதி கிடைத்தவுடன், மேலும் சில பணிகளை துவக்கி, அடுத்த மாதத்தில் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்

.

பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரசாரம் செய்ய, ஒரு நடுநிலையான வல்லுனர் குழு, தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், அணுசக்தி கமிஷனின் விஞ்ஞானிகள் இடம்பெற மாட்டார்கள்.பூகம்பம், சுற்றுச்சூழல், மீன்வளத்துறை, அணு உலைகள் தொடர்பான நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர். தமிழக அரசும் , தன் நிபுணர்களையும், போராட்டக் குழு உறுப்பினர்களையும் இந்த வல்லுனர் குழுவில் சேர்த்து கொள்ளலாம்.மாநில அரசு ஒப்புதல் கொடுத்த பின், இந்த வல்லுனர் குழு, கூடங்குளம் அருகில் உள்ள மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, இடிந்தக்கரை கிராமத்தில், இக்குழு தனிக் கவனம் செலுத்தும்.இப்போராட்டத்தை சில கிறிஸ்துவ அமைப்புகள் வழி நடத்திச் செல்கின்றன. அவர்களிடமும் வல்லுனர் குழு பிரசாரம் செய்ய உள்ளது.இவ்வாறு பானர்ஜி கூறினார்.

No comments: