Friday 24 June 2011

சில பாடல்களும் அதன் விளக்கமும்

நன்றி: ஆதித்ய இளம்பிறையன் தலை வணங்கா தமிழன் பிளாக்!!

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் புன்னகையோ மௌவல் மௌவல் .. ( படம் : சிவாஜி )

ஆம்பல் -> இரவிலே பூத்து பகலிலே குவியும் ஒரு வகை அல்லி பூ.

மௌவல் -> ஒரு வகை காட்டு மல்லி. செந்நிறமாக இருக்கும்.



விளக்கம்

பூ போன்ற பெண்ணே !! நீ இரவிலே பூத்து பகலிலே குவியும் அல்லிகொடி !!

உன் புன்னகையோ காட்டு மல்லி !! ( கட்டு மல்லி மலர்ந்து காடு முழுவதும் வாசனை பரப்புவது போல உன் புன்னகை அனைவரையும் புன்னகை கொள்ள செய்கும் )



ஆம்பல் - அல்லிக்கொடி ( ஓர் இசைக்குழல் என்றும் கொள்ளலாம் )

இருவகை ஆம்பல் உண்டு!

அரக்காம்பல்------செவ்வல்லி

வெள்ளாம்பல்----வெள்ளல்லி!



மலர்களை ஏன் பெண்கள் சூடுகிறார்கள் ?



மலருக்கு இயற்கையான ஒரு தன்மையுண்டு. பஞ்சினைப் போல் ஈரத்தை உறிஞ்சும் தன்மையுண்டு. கூந்தலில் நிறைய மலர்களை சூடும்போது, கூந்தலிளுள்ள ஈரத்தினை ஈர்த்துவிடுகிறது. அதோடு கூந்தலுக்கு அழகையும் தருகிறது.



என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் ( படம் : வேட்டையாடு விளையாடு )



பதாகை - கொடி ( ஒரு அரசனின் அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்படும் கொடியைக் குறிக்கும் சொல்லாகும்.)



என் மனமாகியிய பதாகையில் (கொடியில்) வைத்து நான் தாங்கிய உன் முகம் என்று பொருள் படும்.

இங்கு அவளை ஒரு கொடியாகவும் ...

அவள் இதயத்தில் உள்ள அவனது முகத்தினை ..கொடியில் உள்ள சின்னமாகவும் கொள்ளவும் .



கலாப காதல்

ஆண் மயில் மோக மிகுதியில் தோகை விரித்து ஆடும்போது அதன் உயிர்ச்சக்தி தரையில் விழும்.

பெண் மயில் அதனைக் கொத்தி உண்டு கருத்தரிக்கும்.



தொடாமலேயே காதல் கொண்டு இருப்பதற்கு பெயர் கலாப காதல்.





அற்றைத் திங்கள் அந்நிலவில்,நெற்றித்தரள நீர்வடிய,கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா?



அற்றைத் திங்கள் = அந்த மாதம்;

நெற்றித்தரள = நெற்றியில் முத்து முத்தாய் நீர் வடிய ( தரளம்=முத்து )

கொற்றப் பொய்கை = அரண்மனைக் குளத்தில் விளையாடின பெண் நீ தானே? (பொய்கை=குளம் )



அன்று ஒருநாள் நிலவில் நெற்றியில் முத்து முத்தாய் நீர் வடிய அரண்மனைக் குளத்தில் விளையாடின பெண் நீ தானே?





நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்



முகை=அரும்பு; நறுமுகை=வாசமுள்ள அரும்பு ( மல்லிகை பூவை குறிக்கும் )

ஒரு நாழிகை = 24 நிமிடம்; 60 நாழிகை = ஒரு நாள்



யாயும் யாயும் யார் ஆகியரோ நெஞ்சு நேர்ந்தது என்ன? யானும் நீயும் எவ்வழி அறிதும் உறவு சேர்ந்தது என்ன?

யாய்=தாய்;

உன் தாயும் என் தாயும் யாரோவென தொடர்பற்றவர்கள்.

நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை

இருந்தும் உனக்கும் எனக்கும் எப்படி இப்படி ஒரு பொருத்தம் ..



நந்தா படத்தில் ஒரு பாடலில் "வாவிக் கரையோரம்" என்று வரும் …



வாவி என்பது ஏரி குளம் போல் ஒரு வகையான நீர்த் தேக்கம். மீன்கள் வாழுமிடம்.



மட்டு வாவி . ( மீன்கள் பாடும் இசையை கேட்கக் கூடிய உலகின் அதிசய சூழல் நிறைந்த வாவி).



சங்கமம் படத்தில் வராக நதிக்கரையோரம் என்று ஒரு வரி வரும்



மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள அழகான ஊர் பெரியகுளம். ஊருக்கு நடுவில ஒரு அழகான ஆறு ஓடுகிறது. பெயர் வராக நதி. இந்த நதி மேற்குத் தொடர்ச்சி மலைல உருவாகி வைகை ஆற்றில் கலக்கிறது.கவிஞர் வைரமுத்து பெரியகுளத்துக்கு 4 கி,மீ தொலைவில் இருக்கும் வடுகபட்டியைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய பாடல்களில் வராக நதிஇடம் பெற்றிருக்கிறது. வராக நதி வடுகபட்டி வழியாகத் தான் சென்று வைகையைச் சேருகிறது.



**************************************************************************************************



இது ஒரு சங்க பாடல் . இதை கண்ணதாசன் சினிமாவில் இன்னும் கொஞ்சம் கற்பனை கலந்து எழுதி உள்ளார் ... தலைவன் பொருள்தேடிப் பிரிகிறான். அவன் சென்ற திசை நோக்கி இவள் ஏங்கிக் கிடக்கிறாள். இந்தப் பொல்லாத வேளையில் நிலவு வந்து இம்சிக்கிறது. ஏற்கனவே அவள் மனம் ஏக்கத்தில் சிக்கியிருக்க காதலை ஊட்டும் வசீகர நிலா தன் ஒளியைப் பாய்ச்சி அவளை உஷ்ணப்படுத்துகிற்து. அவளோ துவள்கிறாள். கோபம் வருகிற்து நிலவின்மீது. என்ன இது அநியாயம் என்னை ஏன் வதைக்கிறாய் என்று திட்டவேண்டும்போல் இருக்கிற்து. இருந்தாலும், நிலா காதல் உணர்வுகளை ஊட்டும் அற்புதமாயிற்றே திட்டவும் மனமில்லை. எனவே, அதனுடன் முறையிடுகிறாள் அவள்....





அத்திக்காய் காய் காய் .. ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே .. என்னைப் போல் பெண்ணல்லவோ - நீ என்னைப் போல் பெண்ணல்லவோ



அத்திக்காய் = அத்தி + காய் = அந்தப் பக்கமாக, அந்தத் திசையாக[காதலன் நிற்கும் பக்கம்] + சுடு



ஆலங்காய் = ஆல + காய் = விசம்போல் சுடு



இத்திக்காய் = இத்தி + காய் = இந்தப் பக்கமாக [ தான் நிற்கும் பக்கம்] + சுடு





ஏ நிலாவே.....என்னை நீங்கிச்சென்ற தலைவனோ அங்கே இன்பமாய் இருக்கிறான். அவனை விட்டுவிட்டு என்னை ஏன் காய்கிறாய்? எனவே நீ அவன் இருக்கும் அந்த திக்கில் காய் - அந்த திசையில் காய் - அவனிடம் சென்று காய். வெறுமனே காய்ந்துவிடாதே. நீயும் காயும் மோக வெப்பத்தில் அவன் என்னை நோக்கி ஓடிவரவேண்டும். எனவே நீ விசத்தைப் போல் காய். ஆலம் என்றால் விசம். சாதாரண காய்ச்சலுக்குக் கரையாத அவன் மனம் உன் விசக் காய்ச்சலுக்கு நிச்சயம் சிதையும் இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ என்னிடம் வந்து இந்த திக்கில் காய்ந்து தொலைக்காதே வெண்ணிலாவே. உனக்கு பெண்களில் தவிப்பு விளங்காதா? தனிமை புரியாதா? ஏக்கம் அறிய்மாட்டாயா? ஏனெனில் நிலாவே, நீயும் ஒரு பெண்ணல்லவா?





கன்னிக்காய் ஆசைக்காய் .... காதல் கொண்ட பாவைக்காய் ..அங்கே காய் அவரைக்காய் ......மங்கை எந்தன் கோவைக்காய்





கன்னிக்காய் = கன்னிக்காக



ஆசைக்காய் = ஆசைக்காக



பாவைக்காய் = பெண்ணுக்காய் ( பெண்ணுக்காக )



அவரைக்காய் = அவரை + காய் = தலைவனை + காய்



கோவைக்காய் = கோவை (கோ = அரசன்) + காய் = அரசனை + காய்



நிலவே, தலைவனை நினைத்து நினைத்து உறங்காத விழிகளோடு தவியாய்த் தவிக்கும் இந்த கன்னிப் பெண்ணுக்காக, (கன்னிக்காக - கன்னிக்காய்) அவன் மீது கொண்டுவிட்ட அடங்காத ஆசைக்காக (ஆசைக்காய்), அவன்மீது அபரிமிதான் காதல் கொண்டுவிட்ட பாவைக்காய் (பாவை என்றால் பெண்), அதாவது இந்தப் பெண்ணுக்காய், இங்கே காய்ந்து தொலைக்காதே.



என் மீது இரக்கப்படு, நான் தாங்கும் நிலையில் இல்லை, அவனைத் தேடும் விழுகளோடும், அவனுக்காக ஏங்கும் இதயத்தோடும், அவன் இல்லாமல் உயிரற்றுப் போன உடல் போலவும்தான் வாடுகிறேன். வாடாமல் என்னைவிட்டு எங்கோ ஓடிப்போன அவனிடம் நீ சென்று காய், அங்கேகாய். என்காதலரான அவரைக் காய் . இந்த மங்கையின் ஒற்றை அரசன், தலைவன் அரசனை காய்



இது ஆண்பாடும் வரிகள





மாதுளங்காய் ஆனாலும் ...என் உளங்காய் ஆகுமோ .......என்னை நீ காயாதே ...என்னுயிரும் நீயல்லவோ





மாது = பெண் (மாதுளம்காய் = மாது + உள்ளம் + காய்)



உளங்காய் = உள்ளம் + காய்



அவளின் காதல் தகிப்பில் இப்படி அவள் உள்ளம் காயாகிவிட்டாலும், என் உள்ளம் காய் ஆகுமா? நான் அவளை உணர்ந்தவனல்லவா? காதல் வேதனை புரிந்தவனல்லவா? என்னை நீ காயாதே வெண்ணிலவே? நீ என் உயிர் அல்லவா? என் காதல் தவிப்புகள் அறிந்தவளல்லவா நீ. எனவே நீ என்னைக்க் காயாதே ..





இரவுக்காய் உறவுக்காய் .....ஏங்கும் இந்த ஏழைக்காய் ..நீயும் காய் நிதமும் காய் .....நேரில் நிற்கும் இவளைக்காய் மாலைப்பொழுதுக்கும் / இரவுக்கும் அதன் கூடவே அது கொண்டு வரும் உறவுக்கும் ஏங்கும் இந்த ஏழைக்காக நீ தினமும் காய்வாயாக. இரவுக்காய்.... இரவில்லையேல் இன்பமே இல்லை.இரவு காதலுக்குச் சொந்தம்.... இளமாலை தொட்டு இருள் ஏற ஏற காதலும் ஏறும்.... அந்த இரவுக்காய்..அதனோடு உறவும் வேண்டுமே.... ஏழைக்காய்.... யார் ஏழை? உழைப்பவன் எவனும் ஏழையில்லை. கையேந்துபவன் மட்டும்தான் ஏழை. காதலியிடம் கை ஏந்தும் இந்த ஏழைக்காக நேரில் நிற்கும் இவளைக்காய் என்று.... அப்படியே ஒரு வளைவும் காட்டாமல் என் நேரில் அப்படியே நிக்கும் இதோ இவளைக்காய் காய் காய் காய் என்று பாடுகிறான்





உருவங்காய் ஆனாலும் .......பருவங்காய் ஆகுமோ .......என்னை நீ காயாதே .......என்னுயிரும் நீயல்லவோ



என்னுடைய உருவம்தான் நான் முரண்டுபண்ணுவதுபோல் தெரிகிற்து, ஆனால் என் உள்ளமும் ஓரக்கண்ணும் உன்னிடம்தான் வந்து கிடக்கிறது .என்னை நீ காயாதே வெண்ணிலவே ..நீ என் உயிர் அல்லவா?