தீப ஒளி:
கிட்டத்தட்ட 13800000000 (1380 கோடி) வருடங்களுக்கு முன் பிரபஞ்சம் தோன்றியது. முதல் மூன்று லட்சம் வருடங்களுக்கு "ஒளி" என்ற ஒன்றே இல்லாமல், கும்மிருட்டாக இருந்தது.
அதன் பிறகு ஹைட்ரஜன் அணுக்கள் உருவாகி இப் பிரபஞ்சத்தின் முதல் "ஒளி" உமிழப்பட்டது. ஆகவே இந்தப் பிரபஞ்சத்தின் முதல் தீபம் (பட்டாசு!) ஹைட்ரஜன் (குண்டு) தான் 💙.
பார்த்து ரசிப்பதற்கு என்று ஒருவரும் இல்லாமலே, அணுக்கள் இணைந்து திரள்ந்து மாபெரும் நட்சத்திரங்களாகவும், அதனால் இடம் குழிந்தாழ்ந்து-வளைந்து (Curved Space) ஈர்ப்பு விசையாக மாற, ஈர்ப்பு விசையின் அதீத அழுத்தத்தால் நிலைகுலைந்து 10 கிலோமீட்டர் ஆரமுடைய "பல்சர்" (சுற்றும் நியூட்ரான் ஸ்டார்) உருவாகி, அது இப் பிரபஞ்சத்தின் "சங்கு சக்கரம்" ஆனது!
இப்பொழுதும் பிரபஞ்சத்தில், ஒளியை விட இருட்டுதான் அதிகம். இருள் இருப்பதனாலேயே நம்மால் ஒளியை ரசிக்க முடிகிறது. கோடான கோடி அணுகுண்டுகள் பிரபஞ்சத்தில் எப்பொழுதும் வெடித்துக்கொண்ட இருக்கின்றன.
நல்லவேளை பிரபஞ்சம் 99% வெற்றிடமாக இருக்கிறது, இல்லை என்றால் நம் காது எப்பொழுதோ செவிடாயிருக்கும் (அல்லது பரிணாமத்தில் காது என்ற ஒன்று இல்லாமலே போயிருக்கும்).
காசு காரியாகிறது என்று கதைக்காமல், காசு ஒளியாகிறது என்று வானத்தில் கணப்பொழுதில் தோன்றி மறையும் வர்ண ஒளிக் கோலங்களை ரசியுங்கள். இது பிரபஞ்சத்தின் மினி தீபாவளி.
அனைவருக்கும், என் சார்பாகவும் என் குடுபத்தின் சார்பாகவும் இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் 😊
பி.கு : பிரபஞ்சத்தின் முதல் ஒளியை நீங்கள் பார்க்கவேண்டுமானால், அந்தக் கால டிவியை அன்டெனா இல்லாமல் வெறுமனே ஆன் செய்து, சும்மா உட்க்கார்ந்து கொள்ளுங்கள். அதில் தெரியும் கருப்பு-வெள்ளை புள்ளிகள் தான் பிரபஞ்சத்தின் முதல் ஒளி. ரசிப்பீர்களா என்ன?😉
No comments:
Post a Comment