நன்றி : தினமலர்
URL: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=336632
அரசியல் கட்சிகள், தம் தனிப்பட்ட செல்வாக்கை எடைபோட்டுக் கொள்ள, தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், பெரிதும் உதவியது. கட்சிகள் வேண்டுமென்றே தம்மைச் சுய பரிசோதனைக்கு உள்ளாக்கிக் கொண்டன என சொல்வதற்கில்லை; காரணங்கள் வேறு.
சட்டசபைத் தேர்தலில் தேறவில்லை, பிரதான எதிர்க்கட்சியாக முடியவில்லை, முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள், குடும்ப உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் என்ற நிலையில் இனி வென்றாலும், தோற்றாலும் ஒன்றுதான் என்ற மனநிலையில், தி.மு.க., உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளைக் கழற்றிவிட்டது.ஏற்கனவே சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றாகிவிட்டது. அது கூட்டணியினால் வந்தது என்ற நினைப்பு, தே.மு.தி.க., விஜயகாந்துக்கு இனியும் இருக்கக் கூடாது; சமச்சீர் கல்விப் பிரச்னையில் கம்யூனிஸ்ட்கள் மற்றும் உதிரிக்கட்சிகளின் ஆதரவு இல்லை; இப்படி உள்ளேயிருந்து முணுமுணுத்த அல்லது எதிர்த்த கட்சிகளை உதறிவிட்டால், என்ன பெரிய நஷ்டம் வந்து விடப்போகிறது என்ற மனப்பாங்கில் அ.தி.மு.க., நடந்து கொண்டது.கம்யூனிஸ்ட்கள் தவிர, உதிரிக் கட்சிகள் தங்கள் பலமாக நினைத்துக் கொண்டது, தாங்கள் சார்ந்திருந்த ஜாதிகளின் ஓட்டு வங்கியை. சிறிய வட்டத் தேர்தல்தானே, ஜாதி உணர்வு எடுபடும் என்ற நினைப்பில், பா.ம.க., உட்பட உதிரிக் கட்சிகள் களத்தில் இறங்கின. அவர்கள் நினைத்தபடி, ஜாதி ஓட்டுகள் கை கொடுத்திருந்தால், சில ஊர்களின் தேர்தல் முடிவுகள் மாறிப் போயிருக்கும். ஆனால், ஓட்டளிப்பில் ஜாதி அபிமானம் வெளிப்படவில்லை என்பதே உண்மை.
லோக்சபா தேர்தலில் ஆறு தொகுதிகளிலிருந்து ஒரு வேட்பாளர் அல்லது வெளியூர் வேட்பாளர்; அவ்வளவாக அறிமுகமாகாதவர், அறிமுகமாகியிருந்தாலும் தொகுதிப் பக்கம் அடிக்கடி வராதவர், நெருங்கிப் பழகாதவர் என்று காரணங்களை அடுக்க முடியும். சட்டசபைத் தேர்தலிலும் வேட்பாளர்களைப் பொறுத்தவரை, இதே காரணங்கள் எடுபடும். ஆனால், உள்ளாட்சித்தேர்தல் அப்படியல்ல. வேட்பாளர் வார்டு மக்களுக்கு நன்றாக அறிமுகமானவரே; நகராட்சித் தலைவர், மேயர் பதவிகளுக்குப் போட்டியிட்டவர்களும், அந்தந்த வட்டார மக்களுக்கு நன்கு பழகியவர்களே.இந்நிலையில், அ.தி.மு.க., - தி.மு.க., என்ற இரண்டு பெரிய கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் ஜாதிக்கு அதிக இடம் கொடுக்கவில்லை என்றே சொல்லவேண்டும் ஆகவே, வேட்பாளரின் வெற்றிக்கு, கட்சி, 75 சதவீதம் காரணம், தனி செல்வாக்கு, 20 சதவீதம், ஜாதி அபிமானம் என இருந்திருந்தால் அது வெறும், 5 சதவீதம் என, மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். வேட்பாளர்களின் பட்டியல், தொகுதிகளின் வாக்காளர் எண்ணிக்கை, வேட்பாளர் ஜாதியினரின் எண்ணிக்கை இவை பற்றி சமூகவியலாளர்கள் உடனே ஆய்வு செய்து, இந்த அனுமானத்தை நிரூபிக்கலாம்; நிரூபிக்க வேண்டும்.பத்து மாநகராட்சிகளும், அ.தி.மு.க., வசம்; பல நகராட்சிகளும், பேரூராட்சிகளும் அதன் வசம், என்பது மகத்தான வெற்றி. அதே நேரம் கவனிக்கப்பட வேண்டியது ஜாதியை, நேரடியாகவும், மறைமுகமாகவும் முன்னிறுத்தி வந்துள்ள - பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் வேறு சில உதிரிக் கட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ள யதார்த்தம். இதனால், ஜாதிகளே தமிழகத்தில் இல்லை என, அவசரப்பட்டுப் பெருமை பேசிக்கொள்ள வேண்டாம்; ஜாதிகள் இருக்கின்றன. ஆனால், அவை அரசியல் சக்திகள் அல்ல என்ற நிலை உருவாகி வருகிறது. வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை ஜாதி நிர்ணயிக்கவில்லை என்பது தேர்தல் முடிவுகளிலிருந்து தெரிய வருகிறது.
பா.ம.க., அவ்வப்போது, ஜாதி உணர்வை நேரடியாகவும், மறைமுகமாகவும் வெளிப்படுத்தும். இத்தேர்தலில் அக்கட்சி, 58 நகராட்சி உறுப்பினர் இடங்களைப் பெற்றிருக்கிறது. இதுதவிர, இரண்டு பேரூராட்சி தலைவர் பதவி, 108 பேரூராட்சி உறுப்பினர்களை மட்டுமே பெற்றிருக்கிறது. மாநிலத்தின் மொத்த உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது, இது வெற்றி அல்ல.
சென்னையில் ஒரு வார்டில் வெற்றி, 18 நகராட்சி உறுப்பினர்கள் வெற்றி என்பதுதான் விடுதலை சிறுத்தைகளின் நிலையும்.பொதுமக்கள் காதில் பூ சுற்றுவதற்காக, இக்கட்சிகள், சமூக நீதி, உயர் ஜாதி ஆதிக்கம் என்று பேசி வந்தாலும், பெரிய கட்சிகளிடம் கூட்டணி பற்றி தனியறையில் பேரம் பேசியபோது, "எங்கள் கட்சிக்கு இந்த ஜாதியின் ஓட்டு வங்கி இவ்வளவு சதவீதம்' என்று சொல்லியிருந்ததெல்லாம் கவைக்குதவாத வாதங்களாக, இப்போது நொறுங்கிப் போய்விட்டன. பெரிய கட்சிகள் இனி விழித்துக் கொள்ளும்.பத்து மேயர்கள், 88 நகராட்சி சேர்மன் பதவிகள் உட்பட மொத்தம், 6,619 இடங்களில் அ.தி.மு.க., வெற்றி பெற்றிருக்கிறது. நகராட்சி தலைவர் பதவிகள், 23 உட்பட, 3,349 இடங்களில், தி.மு.க., வெற்றி பெற்றிருக்கிறது. சுயேச்சைகள், ஐந்து நகராட்சிகள் உட்பட, 2,906 இடங்களை வென்றிருக்கின்றனர். ஆனால், பா.ம.க.,வில் வெற்றி பெற்றவர்கள், 235 பேர் மட்டுமே; விடுதலைச் சிறுத்தைகள் 31, புதிய தமிழகம் 9, பகுஜன் சமாஜ் கட்சி 4.ஜாதிக் கண்ணோட்டத்தில் இன்னமும் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் ஓட்டளித்த மக்கள் தந்துள்ள இந்த முடிவை அலசிப் பார்க்க வேண்டும்.
வெவ்வேறு காரணங்களினால், அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் கூட்டணிக் கட்சிகளைக் கழற்றி விட்டாலும், இந்த உள்ளாட்சித்தேர்தலில் அவர்கள் தங்கள் பலத்தை நிர்ணயம் செய்துகொள்ள முடிந்தது; உதிரிக் கட்சிகளை எடைபோட முடிந்தது. தி.மு.க.,வும், தான் பலமிழந்து போனது ஏன் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம்.எப்படியும், மா.சுப்பிரமணியன் சென்னை மேயர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற தி.மு.க.,வின் நம்பிக்கை தகர்ந்து போனதற்குக் காரணம், "2ஜி' பிரச்னையோ, குடும்ப உரசல்களோ அல்ல. அக்கட்சி கவுன்சிலர்கள் நடந்துக் கொண்ட முறையே காரணம். இரண்டு வீடுகளுக்கு ஒரே குழாயில் தண்ணீர் வருவதில் சிரமம் இருக்கிறது என்பதால், தனிக் குழாய் இணைப்பு கேட்க விரும்பி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியை அணுகிய போது, அவர், "அய்யா, வாரியத்திற்கு, 15 ஆயிரம்; கவுன்சிலருக்கு, 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும். கவுன்சிலர் ஒப்புதல் கொடுத்தால் தான் வேலை நடக்கும்!'
இதுபோல் மின் இணைப்பு, புதுக் கட்டடம், பழைய கட்டடப் புதுப்பிப்பு என்று எல்லாவற்றிற்கும் கவுன்சிலர்களுக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்ற நிலையில் மக்கள் நொந்துபோயினர். பழைய கவுன்சிலர்கள் போய், புதிய கவுன்சிலர்கள் வந்ததற்குக் காரணம் இதுவே. கட்சித் தலைமை வானத்தில் வேலிகட்டிக் காற்றைக் கூறுபோட்டதில் லட்சக் கணக்கான கோடிகளைச் சுருட்டியதாகக் குற்றச்சாட்டு வந்தபோது, அது சுவாரஸ்யமான செய்தி மட்டுமே என்று எடுத்துக் கொள்ள முடிந்த மக்களால், பூமியைத் தோண்டுவதற்கு, பத்தாயிரம், பதினைந்தாயிரம் என்ற கெடுபிடி வசூல் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.புதிய கவுன்சிலர்கள் இந்தப் பாடத்தைப் புரிந்துக் கொள்வது நல்லது.கவுன்சிலர்களே இப்படியென்றால், மேயர்களை அணுகியவர்கள் பட்ட பாட்டைத் தெரிந்துக் கொண்டால், படுவேதனைதான்! கேட்டால்தான் தெரியும். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இதைப் புரிந்துக் கொண்டால், மறு தேர்தலில் ஜெயிக்க முடியும். இல்லையென்றால், தாமும் தோற்று கட்சிக்கும் கெட்ட பெயர் வாங்கி தருவர்.
கட்சி தலைமை லஞ்சத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தால் தான், இதை வெற்றி பெற்றவர்களுக்கு உணர்த்த முடியும்.ஆக, கட்சிகள் ஓட்டுகளை இழக்க ஊழல் காரணம்; ஓட்டுகளைப் பெற ஜாதி காரணமல்ல என்பதை இப்போதாவது பெரிய கட்சிகள் புரிந்துக் கொள்ள வேண்டும்.தேர்தலில் வெற்றி பெற ஜாதி அபிமானம் என்ற மாயையைத் தொலைக்க வேண்டும் என்பதை, பெரிய அரசியல் கட்சிகள் புரிந்துக் கொள்ள இன்னொரு தேர்தல் தேவையில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஜாதிக்காரர்களாயிருந்தாலும், கறாராக லஞ்சத்தைக் கறந்து விடுகின்றனர். லஞ்சம் அதிகம் வந்தால், ஜாதியை மட்டுமல்ல, கட்சியையும் மக்கள் உதறிவிடுவர் என்பதை மட்டும் புரிந்துக் கொண்டால் போதும்.சட்டசபைத் தேர்தலில் கூட்டணி பேரங்களில் வெளிப்படையாகச் சொல்லப் பட்டது அந்தக் கட்சிக்கு இவ்வளவு ஓட்டு சதவீதம், அந்தக் கட்சிக்கு இவ்வளவு சதவீதம் என்ற கணக்கு. இந்தக் கணக்கைச் சொன்ன சிறிய கட்சிகளும், ஏற்றுக்கொண்ட பெரிய கட்சிகளும், ஓட்டு வங்கிக்குப் பின்னே ஜாதி ஓட்டுகள் இருக்கின்றன; அந்தந்த ஜாதி மக்களை இந்த தலைவர்கள் கைக்குள் போட்டுக் கொண்டிருக்கின்றனர் என்ற மாயையை நம்பினர். அந்த மாயை, ஜாதிக்கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் காணாமல் போனதன் மூலம் உடைந்து போய்விட்டது.இட்டார் இடாதார், அதாவது ஓட்டு இட்டார், ஓட்டு இடாதார் என்ற இரண்டு தவிர, வேறு ஜாதிகள் இல்லை என்பதை நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சித் தேர்தல் முடிவு உணர்த்துகிறது. சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டசபைத் தேர்தலில் கூட, "ஜாதி' ஒரு அம்சமாகக் கருதப்பட்டதே, இப்போது திடீரென்று அந்த உணர்வு முடங்கிவிட்டதா அல்லது காணாமல் போய்விட்டதா என்ற கேள்வியும் அர்த்தமில்லாதது. அப்போது புரியாதது இப்போது புரிகிறது; அவ்வளவு தான். நிகழ்கால நிஜங்கள் உடனுக்குடன் புரிவதில்லை என்பதே வரலாற்றின் வினோதப் போக்கு.
ஆர்.நடராஜன் - விமர்சகர், அமெரிக்க தூதரகமுன்னாள் அரசியல் ஆலோசகர்
இக் கட்டுரையளரைக் மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ள: hindunatarajan@hotmail.com
This blog is to express my mind, thoughts and scrabbles. A place to express what I am!
Subscribe to:
Post Comments (Atom)
When Gods Became the Universe — Shiva, Vishnu, Krishna
When Gods Became the Universe — Shiva, Vishnu, Krishna When Gods Became the Universe Shiva, Vishnu, and Krishna — The Eternal Cont...
-
Indian equivalent names of various western constellations: by: Ulugh Beg & Maharaja Jai Singh from Book of G.R. Kaye, Fellow of the ...
-
When I talked about this in Orkut Iyers community in 2007/8, some “brainbox" there thought I was just blabbering but it is an archaeo...
-
Recently I had a privilege of attending day time astronomy brainstorming workshop in Indian Institute of Astro Physics, Bangalore ...
No comments:
Post a Comment