Monday 3 December 2018

Ilaiyaraaja royalty issue

Research post by Mr. Vvbala Bala on the Ilaiyaraaja royalty issue. The contents reproduced with due credits. Please don't copy w/o credits

இது ஒரு மீள் பதிவு. சென்ற வருடம் எஸ்பிபி அவர்களுக்கும் இளையராஜா அவர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் போது எழுதப்பட்டது. இப்பொழுது மறுபடியும் ராயல்டி பிரச்சனை. இன்னும் எத்தனை முறை இந்த பதிவை மீள வேண்டுமோ தெரியவில்லை.
இளையராஜாவும் உரிமையும்
****************************
நேற்றிலிருந்து பலர் இதை பற்றி எழுதி விட்டார்கள்.
இருந்தாலும் நான் என் கருத்தை கூறுவது அவசியம் என்று நினைக்கிறேன்.
ராஜா அவர்களின் இசை உரிமை சார்ந்த வழக்குகளின் போக்கை தொடர்ந்து கவனித்து வருபவன், வழக்கறிஞன்,இசையில் ஈடுபாடு உள்ளவன், இசைக்கருவிகள் வாசிப்பதோடு இல்லாமல் இசைக்குழுமத்தையும் நடத்திய அனுபவம் உள்ளவன், பல இசைக்குழுக்களுடன் தொடர்பு கொண்டவன் என்பதால் இந்த நினைப்பு.

பெரும்பாலான கருத்துக்கள் தவறான புரிதலின் அடிப்படையில் எழுதப்பட்டவை..
இந்த விவகாரத்தில் பலர் கூறும் குற்றச்சாட்டுக்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

1. ராஜா பாலுவின் நண்பரில்லையா, அவர் இப்படி செய்திருக்கலாமா? இது துரோகமில்லையா?

2. ராஜா கர்நாடக மும்மூர்த்திகளுக்கு என்ன ராயல்டி கொடுத்தார்?

3. ராஜா காப்பி அடித்ததில்லையா? அவர் அப்போது காப்பி அடித்த கலைஞர்களுக்கு ராயல்டி கொடுத்தாரா?

4. ராஜாவுக்கு ஆணவம் அதிகம். வயதாகி விட்டதால் மூளை மழுங்கி விட்டது இத்யாதிகள்.

5. ராஜா தயாரிப்பாளரிடம் பணம் வாங்கி கொண்டுதானே இசை அமைத்தார். அப்போது அவருக்கு எப்படி உரிமை இருக்கும்?

6.MSV, KVM போன்றோர் இப்படி கேட்கவில்லையே. இவருக்கு மட்டும் ஏன் பேராசை?

7. பாடலை பாடியதால் பாடகருக்கு பாடலில் உரிமை இல்லையா? SPB வழக்கு போட்டால் ராஜா டங்குவார் கிழிஞ்சுடும் போன்றவை.

இவை எல்லாவற்றிற்கும் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இதில் பல கேள்விகள் நம் மக்களின் அறிவுக்குறைபாட்டையே பறைசாற்றுகின்றன. இந்த ஒரு விவகாரத்தில் தர்க்கபூர்வமான பதில்களை கூறுவதின் மூலம் தமிழ் சூழலில் ஒரு அறிவுபெருக்கத்தை ஏற்படுத்தி விட முடியாது என்பது ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போன்ற பல விஷயங்களில் பொதுக்கருத்தாக்கங்களை பார்த்து நொந்து போன நான் கொண்ட விரக்தியான முடிவு.

அதனால் ஒரு சில விஷயங்களுக்கு மட்டும் பதில் கூறுகிறேன். மற்றவைகளுக்கு ஒரு சில வரிகள் மட்டும் போதும் என்று நினைக்கிறேன்.
மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதில் கூறுவதற்கு முன்னால் ஒரு சில விஷயங்களை கூறிவிடுகிறேன். நம் ஊரில் IPRS என்று ஒரு அமைப்பு இருக்கிறது. indian performing Rights society என்ற இந்த அமைப்பு எங்கெல்லாம் கலை நிகழ்ச்சிகள் தொழில் முறையில் நடக்கின்றதோ அங்கெல்லாம் சென்று நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் இருந்து ஒரு தொகையை வசூலித்து அதை மொத்தமாக வருடத்திற்கு ஒரு முறை சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு அவர்கள் பங்கை சேர்ப்பிப்பதர்க்காக ஏற்படுத்தப்பட்டது.

இதில் இருந்தே புரிந்திருக்கும் படைப்பாளிகளே இதற்கு தகுதியானவர்கள் என்று. பணம் போடும் தாயரிப்பாளர்கள் அல்ல. அவர்களின் உரிமை படத்தை தியேட்டரில் வெளியிட மற்றும் பல நவீன ஊடகங்களில் வெளியிட மட்டுமே. இசையை பொறுத்தவரை திரையிடலை தவிர ஒலித்தகடு விற்பனை, காஸட் விற்பனை, Radio மற்றும் TV சானல்களில் ஒளி/ஒலிபரப்பு, போன்றவற்றிற்கான உரிமை இதில் அடங்காது. பெரும்பாலும் அதற்கென தனி ஒப்பந்தங்கள் போடப்படும்.

ராஜாவுக்கு முந்தைய இசையமைப்பாளர்கள் இத்தகைய உரிமையையும் படத்தின் தயாரிப்பாளருக்கே கொடுத்திருக்கலாம் அல்லது அவை இசைத்தட்டு வெளியிடும் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டு இருக்கலாம். ராஜா வந்த பிறகு நிலைமை வேறு. அப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் காரணமாக வானொலியில் மட்டுமே பாட்டு கேட்டு கொண்டிருந்த நாம் நமக்கு பிடித்த பாடல்களை காசட்டில் வீட்டில் டேப் ரிக்கார்டரில் கேட்க்கும் வசதி வந்தது இக்காலத்தில் தான்.

அதற்க்கு முன்பு இசைத்தட்டுக்கள் தான். அவற்றை பெரும்பாலும் சவுண்ட் சர்வீஸ் எனப்படும் ஒலிப்பெருக்கி வாடகைகடைகள்தான் வாங்கும். ஹோட்டல்களும் க்ளப்களும் கூட உண்டு என்றாலும் எண்ணிக்கை குறைவு. ஆகவே அவற்றிற்கு என பெரிய வியாபார தளம் இருக்கவில்லை, அவர்களும் (அக்கால இசை அமைப்பாளர்கள்) அது குறித்து பெரிய அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. IPRS அமைப்பு (1969) இந்த காலகட்டத்தில் தான் துவங்கப்பட்டது. இந்த அமைப்பு படைப்புக்களில் உரிமை உள்ளவர்களுக்கு எந்த விதத்திலும் அவை பயன்படுத்தப்படும்போது பலன் அளிக்கும் விதத்தில் செயல்படவில்லை.

அங்கத்தினர்கள் பலர் இதில் மனக்குறை கொண்டிருந்தார்கள். இந்த அமைப்பு தன் நோக்கத்தை நிறைவேற்றும் விதத்தில் செயல்படுவதில்லை என்று கூறி அங்கத்தினர்களை் ஒன்று கூட்டி இசை அமைப்பாளர் MBஸ்ரீநிவாசன் என்பவரால் முழுவதுமாக கட்டுப்பாடுக்குள் எடுக்கபட்டது இந்த அமைப்பு. இவர் ஒரு இடதுசாரி, Trade unionist. அதன் பிறகு இதன் செயல்பாடு மாறியதா என்றால் இல்லை. ஆனால் எங்கெல்லாம் கச்சேரி அது மேற்கத்திய இசை நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, திரை இசை பாடல்களை இசைக்கும் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அங்கு சென்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்பவர்களை சந்தித்து என்னென்ன பாடல்களை பாட போகிறீர்கள் என்று கேட்டு அதற்கு ஒரு தொகையை கூறி வசூல் செய்து விட்டு வந்து விடுவார்கள். தொகை நிகழ்ச்சியின் தன்மை அது நடக்கும் இடம் இவற்றிற்கு ஏற்ப மாறும். இந்த தொகையை அவர்கள் சம்பந்தப்பட்ட கலைஞர் களுக்கு ஒழுங்காக கொடுப்பதில்லை என்பதே ராஜாவின் குற்றச்சாட்டு.

அதற்காகவே அவர் வழக்கையும் போட்டார். அதை தவிர தனக்கு ராயல்டி தராமல், மேலும் ஒப்புக்கொண்ட தொகையை முழுவதுமாக குடுக்காத ஒப்பந்ததாரர்கள் மேலும் அவர் வழக்கு போட்டார். இதில் உயர்ந்நீதிமன்றதில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருக்கிறது. அதன் பிறகே அவர் ராயல்டியை எனக்கு தந்து விட்டு நீங்கள் நிகழ்ச்சியை நடத்திகொள்ளுங்கள் என்றார். அதை தவறாக புரிந்து கொண்ட பல லைட் ம்யூசிக் குழுக்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர். தங்கள் வாழ்க்கையே அவரால்தான் அமைந்தது என்பதை மறந்து. ஆனால் அவரோ டிக்கட் போட்டு கமர்ஷியலாக நடத்தப்படும் நிகழ்சிகளுக்கே இது பொருந்தும் என்று விளக்கம் கொடுத்தார். கொதித்தவர்கள் தணிந்தனர். இதுதான் பின்னணி.

இந்த IPRS என்ற அமைப்பு பல கோடி ரூபாய்களை கலைஞர்களுக்கான உரிமை பணம் என்று கூறு வசூல் செய்து விட்டு அதில் இருந்து சொற்ப தொகையையே கொடுத்து வருகிறது என்பது பல படைப்பாளிகளின் மனக்குமுறல்.

இடதுசாரிகள் ஒரு அமைப்பை கையிலெடுத்தால் என்ன செய்வார்கள் என்று தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமாக இருக்காது. ஆனால் கலைஞர்களுக்கு இடது வலது என்ற பேதமெல்லாம் தெரியாது. அவர்கள் உலகம் சிறியது. அதற்குள்ளேயே உழன்று கொண்டிருப்பதால் அவர்கள் இதை குறித்து கேள்வி எழுப்பவில்லை. முதன்முதலில் IPRS அமைப்பு படைப்பாளிகளுக்கு என்று கூறி வசூல் செய்யும் பணத்தை முறையாக அவர்களிடம் கொடுப்பதில்லை, இந்த பணத்தை கொண்டு அவர்கள் பல செலவுகளை செய்கிறார்கள். நிர்வாக செலவுகள் என்று அவர்கள் கூறும் கணக்கு ஒப்புகொள்ள முடியாத அளவு அதிகமாக இருக்கின்றது என்று கூறி எதிர்த்தவர் ராஜா. ஒரு உதாரணதிற்கு இந்த புள்ளிிவிவரத்தை பாருங்கள்.
கடந்த ஆண்டு IPRS அமைப்பு licence feeஎன்று வசூல் செய்த தொகை கிட்டத்தட்ட 35கோடி ரூபாய்கள்.

 அதில் அவர்கள் ராயல்டியாக கலைஞர் களுக்கு கொடுத்த தொகை கிட்டத்தட்ட ஆறரை கோடி. மீதம் எல்லாம் அந்த அமைப்பின் டைரக்டர்களின் fee, மற்றும் இதர நிர்வாக செலவுகள். இதன் லட்சணம் இப்போதே உங்களுக்கு புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். புரியவில்லை என்றால் தொடர்ந்து படிக்காதீர்கள்.

இத்தகைய சூழலில்தான் ராஜா இந்த அமைப்பிடம் நீங்கள் ராயல்டி தொகையை கொடுக்காதீர்கள், மாறாக என்னிடமே நேரடியாக கொடுத்து விடுங்கள் என்று கூறினார். இதில் என்ன தவறு இருக்கிறது ?
இதுதான் இந்த விவகாரத்தின் பின்புலம்.
இப்போது சமூக வலைதளங்களில் தொடுக்கப்படும் கேள்விகளுக்கு வருவோம்.

1. ராஜா பாலுவின் நண்பரில்லையா, அவர் இப்படி செய்திருக்கலாமா? இது துரோகமில்லையா?
இதில் நட்பு, துரோகம் எல்லாம் எங்கு வருகின்றது? தான் சம்பாதிக்கும்போது அதற்கு காரணமான தன் நண்பனிடம் அனுமதியோ அல்லது அதற்கான ராயல்டியோ கொடுத்து விட்டால் தீர்ந்தது பிரச்சினை. ராஜா அவருக்கு பணம் எதுவும் பெறாமலேயே கூட அனுமதி கொடுத்துவிடலாம். ஆனால் அனுமதி கேட்கபடாமல் அவை பயன்படுத்தபட்டால் அதுவே முன்னுதாரணமாக கொண்டு பல நிகழ்வுகளுக்கு காரணம் ஆகும்.

2. ராஜா கர்நாடக மும்மூர்த்திகளுக்கு என்ன ராயல்டி கொடுத்தார்?
இது காப்பிரைட் சட்டத்தை பற்றிய விஷயஞானம் எதுவும் இல்லாமல் எழுப்பப்படும் பாமரத்தனமான கேள்வி. நீங்கள் காப்புரிமையை பதிவு செய்தாலே அது குறிப்பிட்ட காலத்துக்குத்தான் செல்லுபடியாகும்.பிறகு அது நீட்டிக்கப்பட வேண்டும். அதுவும் அறுவது ஆண்டுகளுக்குத்தான். அதன் பிறகு அவை பொதுவுடமைதான். சங்கீத மும்மூர்த்திகளின் படைப்புகள் படைப்புரிமை பெறப்படாதவை. அது வேற காலகட்டம். சங்கீத மும்மூர்த்திகள் பற்றி கேள்வி எழுப்பும் நபர்கள் அவர்களுக்கு காலத்தால் மூத்தவர்களான பண்ணிசை மும்மூர்த்திகள் எனப்படும் அருணாச்சல கவி, முத்துத்தாண்டவர்,மாரிமுத்தா பிள்ளை பற்றி எதுவும் பேசுவதில்லையே ஏன்? அவர்களுக்கு ராயல்டி தரப்பட வேண்டாமா?

3. ராஜா காப்பி அடித்ததில்லையா? அவர் அப்போது காப்பி அடித்த கலைஞர்களுக்கு ராயல்டி கொடுத்தாரா?
இது மறுபடியும் காப்புரிமை சட்டம் பற்றிய ஞானம் மற்றும் இசை படைப்புரிமை பற்றிய போதிய தகவல் ஞானம் இல்லாமையால் எழுப்பப்படும் கேள்வி. காப்புரிமை சட்டம் ஒரு படைப்பை அதற்கு முந்தய வேறொரு படைப்பை தழுவியது என்று கூற அதில் Chord progressions, Rhythm pattern மற்றும் lead arrangements ஆகியவை substantialலாக முந்தையதை ஒத்திருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்த விவரம் ரொம்பவும் தெளிவாக அதாவது எழுத்தென்றால் இத்தனை வரிகள், இசையென்றால் இதனை வினாடிகள் என்று கூறாமல் கொஞ்சம் குழப்பமாக இருப்பதால் உலகெங்கும் இந்த விஷயத்தை ஒட்டியே பல வழக்குகள் நடந்து வருகின்றன. இந்த substantial similarities குறித்து பல வழக்குகள் நடந்து இருந்தாலும் ஒரு பிரபல வழக்கை உங்களுக்கு சொல்கிறேன்.

பிரபல பாப் பாடகர் Roy Orbison இயற்றிய Pretty womenஎன்ற பாடலை Richard Gere, Julia Roberts நடித்த Pretty womenபடத்தில் பயன்படுத்தி இருந்தனர். அதற்கு வழக்கு போடப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அதனை fair use என்று கூறி படத்தாயரிப்பாளருக்கு( உரிமம் அவரிடம் இருந்ததால்) சாதகமான தீர்ப்பை கொடுத்தது. இரண்டு பாடலையும் கேட்டவர்களுக்கு இரண்டாவது பாடல் எப்படி அந்த legality யை கடந்தது என்பது புரியும். எனக்கு தெரிந்த வரை ராஜா அன்றைய காலகட்டத்தில் மிக பிரபலமாக இருந்த சில பாடல்களை (சில என்றால் அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்துதான் இருக்கும்,) அடியொற்றி ஆனால் அதேநேரம் அவற்றை indianise பண்ணி இசைத்திருக்கிறார். ( கனவு காணும் வாழ்க்கை யாவும் பாடல் இதில் சேராது, அது உரிமம் வாங்கி பண்ணப்பட்டது) இதை inspiration என்று கூறலாம். அவரை பிடிக்காதவர்கள் இதை காப்பி என்றும் கூறலாம். இரண்டிலுமே கொஞ்சம் உண்மையும் நெறைய மனச்சாய்வுமே இருக்கும்.

4. ராஜாவுக்கு ஆணவம் அதிகம். வயதாகி விட்டதால் மூளை மழுங்கி விட்டது இத்யாதிகள்.....!!
இதுபோன்ற வெறுப்பு உமிழ்தல்களுக்கு பதில் தேவை இல்லைதான் என்றாலும் ஓரிரு வரிகள் கூறுவேன் என்று கூறிய காரணத்தால் இதை எழுதுகிறேன். ராஜாவுக்கு ஆணவம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் நமக்கு என்ன? அதை பற்றி கவலைப்பட வேண்டியவர்கள் அவருடன் இருப்பவர்கள். நாமல்ல. ஆணவம் இல்லாத நாம் ஆணவம் கொண்ட அவர் சாதித்ததில் நூறில் ஒரு சதவிகிதமாவது சாதித்திருகிறோமா என்று கேட்டுகொள்வோம். இல்லையென்றால் அத்தகைய ஆணவத்தை நமக்கும் தர இறைவனை வேண்டுவோம். அப்படியாவது எதாவது உருப்படியாக செய்ய முடிகிறதா என்று பார்ப்போம். ஆணவம் கொண்ட மனிதர் MSV அவர்களின் குடும்பத்திற்கு என ஒரு நிகழ்ச்சி மூலம் ஒரு கணிசமான தொகையை வசூலித்து கொடுத்தது இத்தகையவர்கள் மனதில் என்றும் நினைவில் இருக்க வேண்டுகிறேன். அத்தகைய ஒரு நிகழ்வு அதற்க்கு முன்பும் பின்பும் திரைத்துறையில் நடந்ததில்லை.

5. ராஜா தயாரிப்பாளரிடம் பணம் வாங்கி கொண்டுதானே இசை அமைத்தார். அப்போது அவருக்கு எப்படி உரிமை இருக்கும்?
ஒரு காலத்தில் இத்தகை இசை உரிமைகள் இசைதட்டை வெளியிடும் நிறுவனங்கள் தாங்களே வைத்து கொண்டிருந்தன. அவர்கள் பணம் ஒழுங்காக கொடுப்பதில்லை என்ற காரணத்தினால்தான் ராஜா தன் நண்பரை கொண்டு echo என்ற இசை வெளியிடும் நிறுவனத்தை ஆரம்பித்தார் என்று செய்தி. ஆனால் அதிலும் பிரச்சினை ஏற்பட்டு பிறகு ராஜா காசட்ஸ், பிறகு வேறொரு நிறுவனம் என்று பல ஏற்ற இறக்கங்கள். ஆனால் உயர்நீதிமன்றம் ராஜவிடமே உரிமை இருப்பதாக கூறிய தீர்ப்பில் இடைக்கால தடை எதவும் மேல்முறையீட்டில் வழங்க படவில்லை என அறிகிறேன். அதானாலேயே அவர் தன் Attorney மூலமாக இத்தகைய நோட்டீஸ்களை அனுப்புகிறார். உரிமை இல்லாத விஷயத்தில் உரிமை கோருமளவுக்கு அவர் முட்டாளல்ல என்பதை நாம் நினைவில் இருத்த வேண்டும்.
ஆனால் இந்த விவகாரங்களில் பல ஆண்டுகளாக அவர் தவறாக வழிநடத்தப்டுகிராரோ என்ற ஐயம் எனக்கு உண்டு. ஆனால் அதனால் அவர் இப்போது கோரும் உரிமை தவறு எண்டு ஆகி விடாது.

6.MSV, KVM போன்றோர் இப்படி கேட்கவில்லையே. இவருக்கு மட்டும் ஏன் பேராசை?
இதற்கு ஏற்கனவே பதில் கூறியாகி விட்டது என்று நினைக்கிறேன்.

7. பாடலை பாடியதால் பாடகருக்கு பாடலில் உரிமை இல்லையா? SPB வழக்கு போட்டால் ராஜா டங்குவார் கிழிஞ்சுடும் போன்றவை.
காப்புரிமை சட்டம் கீழ்கண்டவாறு கூறுகிறது,
AUTHORSHIP AND OWNERSHIP
Whose rights are protected by copyright?
Copyright protects the rights of authors, i.e., creators of intellectual property in the form of literary, musical, dramatic and artistic works and cinematograph films and sound recordings.
Who is the first owner of copyright in a work?
Ordinarily the author is the first owner of copyright in a work.
Who is an author?
In the case of a literary or dramatic work the author, i.e., the person who creates the work.
In the case of a musical work, the composer.
link: http://copyright.gov.in/documents/handbook.html
இதன் அடிப்படையில் வைரமுத்து பாடல்கள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வரும்போது அவர் author, ஆனால் அதுவே இசையுடன் கூட வரும்போது ராஜா தான் author. பாடகர்களுக்கும் இது பொருந்தும்.
பின்னுரை:
************
எனக்கும் ஒரு ராஜா ரசிகனாக அவர் சக இசைக்கலைஞர்களை அங்கீகரித்து கவுரவிக்க வேண்டும், இன்றைய இளம் இசை அமைப்பாளர்களை பாராட்டி பேச வேண்டும், ரஹ்மானுக்கு நடந்த ஆஸ்கர் பாராட்டு விழாவில் இசை சம்பந்தமாக பேசி விட்டு போகாமல் ரஹ்மானை இறுக்கி அணைச்சு ஒரு உம்மா கொடுத்திருக்கலாம் என்றெல்லாம் சீரியல் பார்க்கும் பெண்களை போல உணர்ச்சி பூர்வமான அல்ப ஆசைகள் உண்டுதான்.
ஆனால் அதே நேரம் அவரை அவராக புரிந்து கொண்டு ஏற்றுகொள்வதுதான் யதார்த்தம். நாம் விருப்பும்படிஎல்லாம் நாம் இருப்போம். மற்றபடி அவரின் இசையை ரசிப்போம். இப்படிப்பட்ட ஒரு யுக கலைஞனுக்கு நாம் செலுத்த கூடிய நன்றி, அவருடைய இசையை காசு கொடுத்து வாங்குவது. அவர் மீது சேற்றை வாரி வீசாமல் இருப்பது.

No comments: