Saturday 18 February 2012

கவியரசு கண்ணதாசன் எண்ணங்கள் ஆயிரம்


வெற்றி பெற்றவனுக்கு எதுவும் சர்வ சாதாரணமாகத் தெரிகிறது! தோல்வியுற்றவனுக்கு எதைக் கண்டாலும் பயம் வருகிறது.

வென்றவனுக்கு மலையும் கடுகு; தோற்றவனுக்கு கடுகும் மலை.

அவன் மலையோடு மோதிச் சாகிறான், இவன் கடுகைக் கண்டு பயந்துச் சாகிறான்.

வெற்றி மயங்க வைத்துத் தோல்வியை இழுத்து வருகிறது; தோல்வி அடக்கத்தைத் தந்து வெற்றியைக் கொண்டு வருகிறது.


தோற்றவர்களையும் நான் மரியாதையாகத்தான் பார்ப்பேன்; காரணம் அவர்களுக்கும் ஒரு காலம் வரும். வென்றவர்களை பரிதாபமாகப் பார்ப்பேன்; ' இவர்கள் எப்போது அடிவாங்கப் போகிறார்களோ?' என்று. வெற்றி மயக்கம், தோல்வி கலக்கம் இரண்டுமற்ற நிலையினை மேற்கொண்டு விட்டவனுக்கு உணர்ச்சி ஒன்றுதான். அது சந்தோஷமும் அல்ல. துக்கமும் அல்ல. அது நிரந்தர நிலை; அதற்கு அழிவு கிடையாது.

பாபுவின் தூண்டிலில் இன்று நிறைய மீன் கிடைத்தால், நாளை ராமுவின் தூண்டிலில் அதிக மீன் கிடைக்கும்.

வருவது போவதற்காக; போவது வருவதற்காக; பிறப்பது இறப்பதற்காக; இறப்பது பிறப்பதற்காக; அழிவது மீள்வதற்காக; மீள்வது அழிவதற்காக. விதைப்பது அறுப்பதற்காக; அறுப்பது விதைப்பதற்காக.

கோடையில் குளம் வற்றிவிட்டதே என்று கொக்கு கவலைப்படக் கூடாது! மீண்டும் மழைக் காலம் வருகிறது.

மழைக் காலம் வந்து விட்டதென்று நதி குதிக்க கூடாது, அதோ வெயில் காலம் வந்துக் கொண்டிருக்கிறது.

சூரியன் கொதிக்கும் போது தூக்கிப் பிடித்தக் குடையை இருட்டிவிட்ட பின்பு கூட மடக்காதவன் மடையன்.

இருட்டிய போது ஏற்றி வைத்த விளக்கை, விடிந்து விட்ட பிறகும் அணைக்காதவன் மடையன்.

குடைராட்டினத்தில் மேலே போகும்போது பலக் காட்சிகள் தெரியும்; கீழே இறங்கும் போது சுற்றி நிற்கும் ஜனங்கள்தான் தெரிவார்கள்.

புது வெள்ளம் வரும்போது குழந்தைக்கு உற்சாகம் அதிகம்; அதிலே குளித்தால் ஜலதோஷம் பிடிக்கும்.

புது வெற்றியில் தலைக்கனம் அதிகமாகும்; அது அதிகமானால் அடுத்தாற்ப்போல் காத்து நிற்பது அவமானம்.

தேரில் உட்கார்ந்திருப்பவன் குதிரையை மட்டும் கவனித்தால் போதாது. பாதையையும் கவனித்தாக வேண்டும்.

'நான்' என்று நினைக்காதீர்கள்; நினைத்தால் இறைவன் 'தான்' என்பதைக் காட்டி விடுவான்.



ஆகவே எந்த துறையில் உள்ளவர்களுக்கும் சொல்லுவேன்.

தோல்வி அடைந்தவர்களை பழி வாங்காதீர்கள். அன்போடு நடத்துங்கள்.

காலை வெயிலில் உங்கள் நிழல் பின்  பக்கமாக விழுந்தால் மாலை வெயிலில் முன் பக்கமாகத்தான் விழும்.
==================================================================================
கவியரசு கண்ணதாசன் எண்ணங்கள் ஆயிரம் என்ற நூலிலிருந்து

No comments: