Saturday, 8 September 2012

இரவில் மணி அறிதல்: தமிழில் ஒற்றைப்பாடல்

சித்திரைக்குப்பூசமுதல் சீராவணிக்கனுஷமாம்

அத்தனுசுக்குத்திரட்டாதியாம்; நித்த நித்தம்

ஏதுச்சமானாலும் இரண்டேகாலிற் பெருக்கி

மாதமைந்து தள்ளி மதி.

இப்பாடலைக்கொண்டு ஒரு தோராயமான முறையில், இரவில் நட்சத்திரங்கள் உச்சத்தில் வருவதைப்பார்த்து அப்போதைய நேரத்தை சொல்லிவிடலாம். ஆனால் 27 நட்சத்திரங்களை அவைகளுடைய வரிசையில் தெரிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், வானத்தில் அவைகளை அடையாளம் காட்டவும் தெரியவேண்டும்.

பொருள்: சித்திரையிலிருந்து நான்கு மாதங்களுக்கு (இது முதல் சுற்று) பூச நட்சத்திரத்திலிருந்து எண்ணு; ஆவணியிலிருந்து நான்கு மாதத்திற்கு (இது இரண்டாவது சுற்று)அநுஷ நட்சத்திரத்திலிருந்து எண்ணு. மார்கழி மாதத்திலிருந்து நான்கு மாதத்திற்கு (இது மூன்றாவது சுற்று) உத்திரட்டாதியிலிருந்து எண்ணு. ஒவ்வொரு நேரமும் எந்த நட்சத்திரம் உச்சத்தில் காணப்படுகிறதோ அந்த எண்ணிக்கையை இரண்டேகாலால் பெருக்கி, வரும் தொகையிலிருந்து, 5m ஐக்கழிக்கவேண்டும். இங்கு m என்பது, நாம் பார்க்கும் மாதம் எதுவோ அது எந்தச் சுற்றில் வருகிறதோ அந்தச் சுற்றில் அது எத்தனையாவது மாதம் என்ற எண்ணிக்கை.இப்படி கணிக்கப்படும் எண் தான் சூரியன் அஸ்தமித்ததிலிருந்து எத்தனை நாழிகைகள் ஆகியிருக்கின்றன என்பதைத் தெரிவிக்கும் எண்.(1 நாழிகை = 24 நிமிடங்கள்).

எடுத்துக்காட்டுகள்: எ.கா.1: வைகாசி 2ம் தேதியன்று இரவில் நாம் சுவாதி (Arcturus: Alpha-Bootis) நட்சத்திரத்தை உச்சத்தில் பார்ப்பதாகக் கொள்வோம்.வைகாசி மாதம் முதல் சுற்றில் இரண்டாவது மாதம். அதனால் 5m = 10.பூச நட்சத்திரத்திலிருந்து எண்ணினால் சுவாதி எட்டாவது நட்சத்திரம். 8 x 2 1/4 = 18. ஆக நமக்குக் கிடைக்கும் எண்ணிக்கை 18-10 = 8. 8 நாழிகைகள் = 3 மணி 12 நிமிடம்.இதனால் அப்போதைய நேரம் ஏறக்குறைய 9-12 p.m.

எ.கா. 2: மாசி மாதம் 30ம் தேதியன்று இரவில் சித்திரை (Spica)யை உச்சத்தில் பார்ப்பதாகக்கொள்வோம். மாசி மாதம் மூன்றாவது சுற்றில் மூன்றாவது மாதம். அதனால் 5m = 5x3 = 15.இப்பொழுது உத்திரட்டாதியிலிருந்து எண்ணவேண்டும். உத்திரட்டாதியிலிருந்து சித்திரை 16வது நட்சத்திரம். இதை இரண்டெகாலால் பெருக்க, கிடைப்பது 36. 36 - 15 =21. சூரியாஸ்தமனத்திலிருந்து 21 நாழிகை கணக்கிட்டால், இரவு 2-24 A.M. என்பது அப்பொதைய நேரத்தின் தோரயமான கணிப்பு.

எனது தாய்வழி பாட்டனார் இதைப் போல் பாடல்களைக் கொண்டு இரவில் மணி சொல்லுவார்! ஒரு ஐந்து நிமிடம் முன்பு  / பின்பு இருக்கும். நான் அவரிடம் இருந்து வானியல் மற்றும் வானசாஸ்திர கலையை சிறிது அளவு கற்றேன்!

No comments:

Saturn’s Southern Decagon

  Saturn’s Southern Decagon: When a Giant Planet Draws Geometry in the Sky A newly observed ten-sided atmospheric wave raises fresh qu...