நன்றி: ஷகினா, டெஹல்கா வார இதழ் - 20.11.2010
தலைக்கு ஊத்தல்! சாவகாசமாக ஒரு எண்ணெய்க் குளியல். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அன்பும், நலமும் வேண்டி செய்யப்படும் ஒரு சடங்கு... விழாக்காலங்களின் தொடக்க நிகழ்வாக... கோடையின் வெப்பத்தை எதிர்கொள்ள உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் ஒரு வழக்கம்...! தமிழ்நாட்டின் விருதுநகர் பகுதியிலோ இது மெதுவாக நடைபெறும் ஒரு கொலை. வறுமையின் கொடுமை தாங்காமல் வயதான தாயை பெற்ற மகனே கொலை செய்யும் கொடூரத்தின் அடையாளம்!
தமிழ்நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் வயதான முதியவர்களை பராமரிக்க இயலாமல் அவர்கள் வீட்டு இளைய தலைமுறையே இவ்வாறு செய்யும் நிலைக்கு தள்ளப் படுகின்றனர். 65 வயதான மாரியம்மாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கும் இது நடக்கலாம் என சந்தேகம் எழுந்தது. அவர் மகன் வீட்டை விட்டு வெளியேறினார். "நான் என் காலில் நிற்குமளவுக்கு உறுதியாக இல்லை: ஆனால் என் குழந்தைகளால் கொல்லப்படுவதைவிட இது மேலானது!"
அவர் குரலில் கோபமோ, கசப்புணர்வோ இல்லை. "அவர்களுடைய குழந்தைகளை பராமரிக்கவே அவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்!" என மகன்களைப் பற்றி அவர் கூறுகிறார். அவருடைய இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் விவசாயக்கூலி வேலை செய்கின்றனர். ஒவ்வொரு நடவுக்கும், அறுவடைக்கும் வெவ்வேறு ஊர்களுக்கு சென்று கூலிவேலை செய்வது அவர்களின் தொழில். அவரது பிள்ளைகள் குடும்பத்தை நடத்தவும், பேரக்குழந்தைகளை படிக்கவைத்து பராமரிக்கவும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது மாரியம்மாவிற்கு தெரியும். அதில் தானும் அவர்களோடு இருப்பது அவர்களுக்கு கூடுதல் சுமை என்பதும் புரிந்தது. எனவே அவர்களை விட்டுவிலகாவிட்டால் அது எங்கு போய் முடியும்? என்பது மாரியம்மாவிற்கு தெரிந்திருந்தது.
மாரியம்மாவின் வயதை ஒத்த மற்ற ஆண்களுக்கும், பெண்களுக்கும் நடந்ததை அவர் பார்த்தார். அவரது அண்டை வீட்டிலிருந்த 76 வயதான பார்வதிக்கு பக்கவாத நோய் இருந்தது. "பார்வதிக்கு ஒரே மகன். சென்னையில் கூலிவேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனால் எப்படி படுத்தப்படுக்கையாக இருக்கும் அவனுடைய தாயை பார்த்துக் கொள்ள முடியும்?" என்கிறார் மாரியம்மா. "ஒரு நாள் பார்வதியின் மகன் சென்னையிலிருந்து வந்து, "அதை"ச் செய்துவிட்டு சென்றுவிட்டான். அவனால் வேறு என்ன செய்யமுடியும்?" என்று கேட்கிறார், மாரியம்மா. அந்தக் குரலில் கோபமோ, பயமோ இல்லை: உதவி செய்ய யாருமற்ற நிர்க்கதியான உணர்வே அந்தக் குரலில் இருக்கிறது. கொலையை திட்டமிட்டு செய்பவர்கள் மீது பச்சாதாபம்!
இருள் விலகி பொழுது புலரும் முன்பே "அந்த முதியவர்"கள் எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்கப்படுகின்றனர். பின்னர் நாள் முழுதும் குளிர்ந்த இளநீர் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே முதியவர்கள் தங்கள் குழந்தைகளிடம் எண்ணெய் தேய்த்துக் குளித்தவுடன் குளிர்ச்சியாக எதையும் சாப்பிடக்கூடாது என்பதை பல ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லியிருப்பார்கள் என்பது கொடுமை. எண்ணெய்க்குளியல் மற்றும் இளநீரின் குளிர்ச்சி தாங்காமல் வயது முதிர்ந்த பெரியவரோ, மூதாட்டியோ காய்ச்சல் வந்து ஓரிரு நாளில் உயிரை துறப்பார்கள்.
காலப்போக்கில் இவ்வாறான கொலைகளை செய்வதில் பல புதிய முறைகள் உருவாகிவிட்டன. வயதானவர்களின் வாயில் சேற்றைத் திணிப்பது இவற்றில் ஒன்று. மண் பாசம் காரணமாக உயிர் பிரிய மறுப்பதாகக் கூறி இந்த முறை கையாளப்படுகிறது. ஆனால் உண்மையில் மண்ணை செரிக்க முடியாமல் மரணம் ஏற்படும்.
சாத்தூரைச் சேர்ந்த துரைராஜ் என்ற விவசாயி, அவருக்கு தூரத்து உறவினரான முனியம்மாள் வேறோரு முறையில் கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்டார். 78 வயதான முனியம்மாள் தனக்கு தேவையானதை தானே சம்பாதிக்க முடியாத அளவிற்கு பலவீனம் அடைந்தார். அவருக்கும் "தலைக்கு ஊத்தல்" நடந்தது. ஆனால் அதிலும் அவர் உயிர் பிரியவில்லை. சில நாட்களில் அவருக்கு "பால் ஊற்றப்பட்டது". இந்த பால் ஊற்றப்படுவதற்கு முன்னதாக அந்த முதியவர்களுக்கு திட உணவு கொடுப்பது நிறுத்தப்படும். பின்னர் அவர்களுக்கு பால் ஊற்றும்போது அவர்களின் மூக்கை யாராவது ஒருவர் மூச்சுவிட முடியாதவகையில் அழுந்தப்பிடித்துக் கொள்வார்கள். பசியால் தவிக்கும் ஒருவருக்கு தொடர்ச்சியாக பால் ஊற்றப்படும்போது, மூக்கையும் மூச்சுவிடமுடியாமல் பிடித்தால், ஊற்றப்படும் பால் அவர்களின் மூச்சுக்குழலில் இறங்கும். சில மணித்துளிகளில் உயிரிழப்பது உறுதி!
சில இடங்களில் விஷம் கொடுப்பதும் நடக்கிறது. பரமக்குடியில் கணேசனுக்கு அதுதான் தொழில்! மருத்துவராக பணியாற்றுவதாகக் கூறும் கணேசன் ஒரு மரணதேவன். தேவைப்படுபவர்களுக்கு விஷமருந்தை ஊசிமூலம் செலுத்துகிறார். "வாழவேண்டிய வயதில் உள்ள யாரையும் நான் கொல்லவில்லை. ஒருவரின் இறுதிக்காலத்தில் அவர் வறுமையில் வாடாமல் இருக்கவே நான் இதைச் செய்கிறேன்!" என்கிறார் கணேசன்.
இவ்விதமான பழக்கங்கள் நடைமுறையில் இருந்தாலும் விருதுநகர், ராமசாமிபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்ற 60 வயது முதியவர் இறந்தபோது இது விவாதத்திற்கு வந்தது. சாலை விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக இருந்த செல்வராஜ் மரணம் அடைந்தபோது அவரது உறவினரான அசோகன் கொடுத்த புகாரின் பேரில் செல்வராஜுக்கு விஷ ஊசி போட்டதாக ஜீனத் என்ற பெண் கைது செய்யப்பட்டார். ஆனால் இறந்துபோன செல்வராஜின் உடல் தகனம் செய்யப்பட்டிருந்ததால் புகாரை நிரூபிக்க முடியவில்லை. ஜீனத் இப்போது பிணையில் இருக்கிறார்.
இந்த செய்தி தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் வி.கே. சண்முகம் கூறுகிறார். இதுபோன்ற சமூக அவலங்களை எதிர்கொள்ள அரசு வழக்கமாக மேற்கொள்ளும் கைது, எச்சரிக்கை, விசாரணை போன்ற நடைமுறைகள் உதவாது என்பது அவரது கருத்து.
தலைக்கு ஊத்தல்! இந்த செயலை குற்றச்செயலா அல்லது வறுமையின் கோரத்தால் நடைபெறும் செயலா என்று தீர்மானிக்க முடியாத ஒரு செயல். இது ஒரு சமூகத்தின் வழக்கமாக இருந்துள்ளது. குடும்பத்தினர் கூடி எடுக்கும் முடிவு. அன்பிற்குரியவர்களை வழியனுப்பி வைக்கும் ஒரு சடங்கு. சில நேரங்களில் பலியாகும் முதியவர்களின் விருப்பம். வறுமையிலிருந்து விடுபட்டு நிரந்தர அமைதிக்கான பாதையாகவும் இது இருப்பதாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகம் கூறுகிறார். இதை சட்டம் மற்றும் குற்றச்செயலாக மட்டுமே பார்ப்பது சிரமம் என்றும் அவர் கூறுகிறார்.
தலைக்கு ஊத்தலை குற்றச் செயலாக கருதினால் முழு கிராமமே அதற்கு உடந்தை! கிராமத்தினரும், உறவினர்களும் இதை ஆதரிப்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை. தலைக்கு ஊத்தும் நாளுக்கு ஓரிரு நாள் முன்னதாக வந்து அந்த முதியவரையோ, மூதாட்டியையோ "கடைசியாக" ஒரு முறை பார்த்துச் செல்வதும் உண்டு. அந்த முதியவரோ, மூதாட்டியோ இறக்கப்போகிறார் என்பது அனைருக்கும் தெரியும்.
இந்த தலைக்கு ஊத்தும் பழக்கம் எந்த ஜாதிக்கோ, சமூகத்துக்கோ தனி உரிமையானது அல்ல. வறுமையில் வாழும் அனைத்து சமூகத்தினரும், ஜாதியினரும் இதைச் செய்கின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் கூலி விவசாயிகளாகவோ, ஆடு மேய்ப்பவர்களாகவோ, சிறு தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களாகவோ இருக்கின்றனர். அவர்களினஅ வாழ்க்கை நிலை, வயது முதிர்ந்த பெற்றோர்களை வீட்டில் வைத்து பராமரிக்கும் அளவிற்கு இல்லை.
வறுமை காரணமாக முதியவர்களை கொலை செய்வது கொடுமையான தீர்வுதான், ஆனாலும் அதைத்தவிர வேறு வழியில்லை என்பதே இப்பகுதி மக்களின் கருத்து.
காசியின் வயது அறுபதா அல்லது எழுபதா என்பது அவருக்கே தெரியாது. மனைவி இறந்தபின் மகனின் வீட்டிலிருந்து வெளியேறி விட்டார். அவரது நிறைந்த வாழ்க்கையின் அடையாளமாக நரைத்த தலைமயிரும், மீசைகளும், சுருக்கம் விழுந்த தோலும் இருக்கின்றன. தனக்கு தேவையானதை செய்வதற்கு தன் பிள்ளைகள் கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இல்லாவிட்டால் அவருக்கும் இந்நேரம் தலைக்கு ஊத்தப்பட்டிருக்கலாம்.
விருதுநகரில் பரவலாக முதியவர்களும், மூதாட்டிகளும் வீட்டிலிருந்து விலகி இருக்கின்றனர். என் மகன் அவன் வாழ்க்கைக்கே கஷ்டப்படுகிறான் என்கிறார் காசி. நான் ரேஷன் கடையில் கிடைக்கும் அரிசியால் நன்றாகவே இருக்கிறேன் என்கிறார் மாரியம்மா. அவர்கள் பட்டினி கிடக்கின்றனர். கஷ்டப்படுகின்றனர். ஆனால் புகார் கூறவில்லை. தலைக்கு ஊத்தல் என்பது கோழைத்தனமான கொலையாக அவர்கள் பார்க்கவில்லை. வீரமான பிரிவுபசாரமாகவே பார்க்கின்றனர். காசிக்கும், மாரியம்மாவிற்கும் இது கொடுமையான விஷயம் இல்லை. மிஞ்சியுள்ளவர்கள் உயிர் வாழ்தலுக்கான நடைமுறை அன்பாகவே இருக்கிறது.
தேவைப்படுபவர்கள் இந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை (அருணா ஷன்பாக் வழக்கு) வேணா சேவ் பண்ணி வெச்சுக்கோங்க. இது சம்பந்தமான விவாதங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.
http://www.supremecourtofindia.nic.in/outtoday/wr1152009.pdf
This blog is to express my mind, thoughts and scrabbles. A place to express what I am!
Subscribe to:
Comments (Atom)
When Ice Remembered Fire — Comets, Oort Clouds, and Interstellar Wanderers
When Ice Remembered Fire — Comets, Oort Clouds, and Interstellar Wanderers When Ice Remembered Fire — Comets, Oort Clouds, and I...
-
Indian equivalent names of various western constellations: by: Ulugh Beg & Maharaja Jai Singh from Book of G.R. Kaye, Fellow of the ...
-
When I talked about this in Orkut Iyers community in 2007/8, some “brainbox" there thought I was just blabbering but it is an archaeo...
-
Recently I had a privilege of attending day time astronomy brainstorming workshop in Indian Institute of Astro Physics, Bangalore ...